தலைப்புச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை 33 வீதமாக அதிகரிக்குமாறு கோரிக்கை

ற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையைத் தக்கவைத்துக் கொண்டே, மாகாண சபைத் தேர்தல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான ஒரு தொழில்நுட்பக் கட்டமைப்பை தேர்தல் ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது. 

வருங்கால மாகாண சபைத் தேர்தல்களுக்கான தேர்தல் முறையை ஆய்வு செய்து பரிந்துரைக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிடம் இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது. 

அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழு, நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து விவாதித்தது.

இதில், மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பேரவையின் தலைவரான அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் மற்றும் பேரவையின் உறுப்பினர்களும் பங்கேற்றனர். 

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தல் முடிவுகளைக் கணக்கிடும் தற்போதைய முறையை மாற்றாமல், பெண்கள் மற்றும் இளைஞர் வேட்பாளர்களுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கை கவனம் செலுத்துகிறது. 

பெண்கள் மற்றும் இளைஞர்களின் அதிக பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதிலுள்ள சாத்தியமான சட்ட மற்றும் நடைமுறைச் சவால்களைக் குழு உறுப்பினர்கள் இதன் போது கோ ஆய்வு செய்தனர்.

இந்த முன்மொழிவுகள் குறித்த மேலதிக விவாதங்கள் எதிர்காலக் கூட்டத்தில் நடைபெறும் என, நாடாளுமன்றத் தகவல் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை குறைந்தபட்சம் 33 சதவீதமாக உயர்த்த வேண்டும் என மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரவை ஒருமனதாக கோரிக்கை விடுத்தது.

புதிய தேர்தல் கட்டமைப்பை இறுதி செய்யும் போது, ​​முன்மொழியப்பட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் இந்த இலக்கைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று பேரவை வலியுறுத்தியது.

இந்தக் கூட்டத்தில் பிரதி அமைச்சர்கள் அருண் ஹேமச்சந்திர மற்றும் சுனில் வத்தகல, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், சாணக்கியன் ராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்க, சமன்மாலி குணசிங்க மற்றும் லட்சுமண் நிபுண ஆராச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க மற்றும் ஆணைக்குழுவின் பிற உறுப்பினர்களும் உடனிருந்தனர்.