
– பாறுக் ஷிஹான் –
சம்மாந்துறைப் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு விளைவிக்கும் வகையில, மோட்டார் பைக்களில் ஆபத்தான முறையில் பயணித்த இளைஞர்கள் குழுவொன்றை, சம்மாந்துறைப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
அத்துடன் அவர்கள் பயணித்த மோட்டார் பைக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலாகி, பொதுமக்கள் மத்தியில் பலத்த கண்டனங்களையும் அதிர்வையும் ஏற்படுத்தியிருந்த வீடியொ ஒன்றினை அடிப்படையாகக் கொண்டே சம்மாந்துறைப் பொலிஸார் இந்த விசேட அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

தலைக்கவசம் அணியாது மோட்டார் பைக் ஓட்டியமை, ஒரே மோட்டார் பைக்-இல் 03 முதல் 04 பேர் வரை பயணித்தமை, பிரதான வீதியை மறித்து ஆபத்தான முறையில் சாகசம் செய்தமை உள்ளிட்ட -விதிமீறல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வீடியோவின் அடிப்படையில், சம்மாந்துறைப் பகுதியில் சில இளைஞர்கள் – போக்குவரத்து மற்றும் வாகனங்களை செலுத்தும் விதிகளை மீறியதோடு, ஆபத்தான முறையில் வாகனங்களைச் செலுத்தி பொதுமக்களுக்கும் ஏனைய சாரதிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியமை தெளிவாகப் பதிவாகியிருந்தது.
அந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த சம்மாந்துறைப் பொலிஸார், போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனச் சட்டங்களை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில், தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ததுடன், அவர்களது மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.


