
அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, இரு தரப்பினராலும் மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி அறிவித்துள்ளார் .
அந்த ஒப்பந்தம் ஏற்கனவே அமுலுக்கு வந்துவிட்டது என்று அவர் மேலும் கூறினார்.
இரு தரப்பினரும் ஒப்பந்தத்தை மின்னணு முறையில் கையெழுத்திட்டதால், முன்னர் எதிர்பார்க்கப்பட்டதைப் போல சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் வெள்ளிக்கிழமை கையெழுத்து நிகழ்வு நடைபெறாது என்று பாகாயி குறிப்பிட்டார்.
ஈரான் – அமெரிக்கா இடையே 110 நாட்கள் நீடித்த போரால் மத்திய கிழக்கு மட்டுமின்றி, சர்வதேச அளவில் நிலவிய நெருக்கடி, 14 முக்கிய அம்சங்கள் அடங்கிய அமைதி ஒப்பந்தம் மூலம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானும் கையெழுத்திட்டுள்ளனர்.
ஈரான், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போரை உடனடியாக நிறுத்தவும், இனி மோதலில் ஈடுபடாமல் இறையாண்மையைப் பாதுகாக்கவும் இந்த ஒப்பந்தம் மூலம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்காது என்றும் தனது செறிவூட்டப்பட்ட பொருட்களை ஐநா (IAEA) மேற்பார்வையில் தரம் குறைக்கும் எனவும் கூறப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா புதிய தடைகளையும் விதிக்காது மற்றும் மேலதிக படைகளையும் பிராந்தியத்தில் நிறுத்தாது எனவும் உறுதியளித்துள்ளது.
அமெரிக்காவும், ஈரானும் அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை மூலம் முடிக்க வேண்டும். தேவைப்பட்டால், இரு தரப்பு சம்மதத்துடன் இந்தக் கால அவகாசத்தை நீட்டித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் அடுத்த 30 நாட்களுக்குள் கடற்படை முற்றுகையை நீக்கி, அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொள்ளும் எனவும், இடைப்பட்ட காலத்தில் கப்பல் போக்குவரத்து நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரசீக வளைகுடாவில் வணிகக் கப்பல்கள் 60 நாட்களுக்குக் கட்டணமின்றி பாதுகாப்பாகச் செல்ல ஈரான் வழிவகை செய்யும். ஐ.நா மற்றும் அமெரிக்காவின் அனைத்து ஒருதலைப்பட்சத் தடைகளும் நீக்கப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், இவ்விவகாரத்தில் உடனடி பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் சம்மதித்துள்ளன.


