
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவுக்கு மனிதாபிமானமற்ற துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்து, அதனைக் கண்டிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் இன்று திங்கட்கிழமை (08) கொழும்பில் சத்தியாகிரக போராட்டத்தைத் தொடங்கின.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டம், கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
சுரேஷ் சாலே நடத்தப்படும் விதம் குறித்த கவலைகளை அதிகாரிகள் நிவர்த்தி செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று – சத்தியாகிரக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஆதரவாளர்களை ஒற்றுமையுடன் இணையுமாறும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஈஸ்டர் தின தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக சுரேஷ் சாலே சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் உண்ணா விரதம் மேற்கொண்ட நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்று இரவு (07) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


