
– பாறுக் ஷிஹான் –
பதினான்கு (14) வயதுடைய இளம் ஆண் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டில், தலைமறைவாகி இருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் – மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுகந்த கம பகுதியில் அமைந்துள்ள விகாரையில், பிக்கு இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
விகாரையில் தங்கி இருந்த 05 இளம் பிக்குகளில் மூன்று இளம் பிக்குகள் அண்மையில் தப்பிச் சென்றமையை அறிந்த ஊர் மக்கள், விகாரையை நோக்கி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ள தயாரான வேளை, குறித்த விடயம் அம்பலமானது.

02 இளம் பிக்குகளை வாக்குமூலம் பெறுவதற்காக விகாரையில் இருந்து பொலிஸார் அழைத்து சென்ற நிலையில், 41 வயது பௌத்த தேரர் – தீகவாவி பிரதேசத்திற்கு தப்பி சென்றிருந்தார்.
பின்னர் மற்றுமொரு பௌத்த பிக்கு சகிதம் சந்தேக நபரான பௌத்த தேரர், தீகவாபி பகுதியில் இருந்து மத்திய முகாம் பொலிஸாரிடம் சரண் அடைந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
அத்துடன் குறித்த சம்பவத்தில் வாக்குமூலம் வழங்கிய இரு இளம் பிக்குகளில், துஷ்பிரயோகத்துக்கு ஆளான 14 வயதுடைய இளம் பிக்குவிடம் மத்திய முகாம் பொலிஸார் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டதுடன், வைத்திய பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்துச் சென்றனர்.
குறித்த சம்பவத்தில் கைதான 41 வயது சந்தேக நபரான பௌத்த தேரரை இன்று (03) அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த – மத்திய மகாம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


