தலைப்புச் செய்திகள்

சுரேஷ் சாலேயின் மனநலத்தைப் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேயின் ஆரோக்கியம் குறித்த தகவல்களைச் சமர்ப்பிக்குமாறு, கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேகர இன்று (03) குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) உத்தரவிட்டார்.

சுரேஷ் சாலேயின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெனாண்டோ; தனது கட்சிக்காரருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்வதை எதிர்த்து ஒரு மனுவைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சுரேஷ் சாலே – மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.

நீதிமன்ற வைத்திய அதிகாரி சமர்ப்பித்த அறிக்கைகளின்படி, சுரேஷ் சாலே மனச்சோர்வு, பதட்டம் மற்றும் போருக்குப் பிந்தைய மன உளைச்சல் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தற்கொலை செய்துகொள்ளும் அபாயத்தை உருவாக்குவதாகவும் – சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எனவே, சுரேஷ் சாலேயை மனநல சிகிச்சைக்கு உகந்த சூழலில் வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது, எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், முறைப்பாட்டாளர் தரப்பினரும் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்று நீதவான் கூறினார்.

அதன்படி, இவ்வழக்கு நாளை (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், குற்றப் புலனாய்வுத் துறைக்குப் பொறுப்பானவர் நீதிமன்றில் ஆஜராக வேண்டுமெனவும் நீதவான் உத்தவு பிறப்பித்தார்.