தலைப்புச் செய்திகள்

அனுராதபுரம் அட்டமஸ்தானத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து, பல்லேகம ஹேமரத்ன தேரர் விலகத் தீர்மானம்

சிறுமியொருவரை பாலியல் வன்புணர்வு செய்தார் எனக் கூறப்படும் வழக்கு தொடர்பாக எழுந்த பரவலான மக்கள் எதிர்ப்பையடுத்து, அனுராதபுரம் அட்டமஸ்தானத்தின் தலைமைப் பொறுப்பாளரான பல்லேகம ஹேமரத்ன தேரர் தனது பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக ஏசியன் மிரர் நம்பகமான வட்டாரங்கள் மூலம் அறிந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

71 வயதான பல்லேகம ஹேமரத்ன தேரர், 12 வயது சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில், இந்த மாதத் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார்.

பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் தாயாரும் – மேற்படி குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திடீர் சுகயீனம் ஏற்பட்டதாகக் கூறி, பொலிஸ் காவலுடன் வைத்தியசாலையில் தேரர் அனுமதிக்கப்பட்டார். இதன் மூலம் விளக்கமறியல் இருப்பதை அவர் தவிர்த்தார்.

இதன் பின்னர், அவருக்கு அனுராதபுர நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டது.

நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடையும் வரை, ருவன்வெலி மகா சேயாவின் தலைமைப் பொறுப்பாளரான ஈத்தலவேதுனவேவ ஞானதில்லக்க தேரர், நிர்வாகப் பொறுப்புகளை ஏற்று அட்டமஸ்தானத்தின் கடமைகளை ஆற்றுவார்.