
ஹட்டன், டிக்கோயாவில் நடந்த இரட்டைக் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேக நபர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது, இன்று (27) அதிகாலை சிறை அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் ஜூன் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக – நேற்று (26) கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர், இன்று அதிகாலை வைத்தியசாலையில் இருந்து தப்பிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சந்தேக நபரைப் பிடிப்பதற்காக சிறை அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடத்தினர்.

இந்த நிலையில், பொகவந்தலாவயில் உள்ள ஃபெட்டெரெஸ்ஸோ தோட்டத்தில், குறித்த சந்தேக நபர் பதுங்கியிருந்தபோது, அவரை பொலிஸார் கைது செய்து – ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது சந்தேக நபரை ஜூன் 3ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையில், சந்தேக நபர் கொலை மற்றும் திருட்டுக் குற்றங்களை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. தனது மனைவி பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக, அவரின் தூண்டுதலின் பேரில் இந்தக் குற்றங்களைச் செய்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும், சிறையிலிருந்து விடுதலையானதும், இந்தக் குற்றத்தைச் செய்வதற்கு, தன்னைத் தூண்டியதாகக் கூறப்படும் தனது மனைவியைக் கொலை செய்துவிடுவேன் என்றும் ஹட்டன் பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளார்.
இந்த வாக்குமூலங்களைத் தொடர்ந்து, சந்தேக நபரின் மனைவியை இன்று பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு போகவந்தலாவ பொலிஸார் அறிவித்துள்ளனர்.


