
மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுஃப், தனது பதவியிலிருந்து விலகும் விருப்பத்தை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கூறியுள்ளதாகவும், புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை தொடர்ந்து பணியாற்றவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் பொறுப்புகள் மற்றும் குடும்பக் கடமைகளைக் காரணம் காட்டி, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஆளுநர் என்ற தனது பொறுப்புகள், அந்நிய நேரடி முதலீட்டுக்கான ஜனாதிபதியின் சிறப்புத் தூதர் என்ற தனது கூடுதல் பணி மற்றும் குடும்பக் கடமைகள் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்துவது பெரும் சவாலாகியுள்ளதாக, ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தனது பதவி குறித்த சமீபத்திய ஊடக யூகங்களுக்கு மத்தியில், சில காலத்திற்கு முன்பே தனது ராஜினாமா எண்ணத்தை தெரிவித்திருந்ததாகவும் கூறியுள்ளார்.
“ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, சுமூகமான மற்றும் ஒழுங்கான மாற்றத்தை உறுதி செய்வதற்காக, பொருத்தமான ஆளுநர் அடையாளம் காணப்படும் வரை, நான் ஆளுநராகத் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் பதவியிலிருந்து விலகிய பிறகு, அந்நிய நேரடி முதலீட்டுக்கான ஜனாதிபதியின் சிறப்புத் தூதர் என்ற தனது தன்னார்வ கௌரவப் பதவியில் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
அந்தத் தகுதியில், தனது சர்வதேச வலையமைப்புகள் மற்றும் உறவுகள் மூலம் இலங்கைக்கு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கவுள்ளதாகவும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்குச் சேவை செய்வதில் தாம் உறுதியாக இருப்பதாகவும், தன் மீது ஜனாதிபதி வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.


