
ஆராய்ச்சிக்கட்டு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜகத் சமந்தவுக்கு, ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சிக்கட்டு பிரதேச செயலாளர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, சிலாபம் மேல் நீதிமன்றம் அவருக்கு இன்று (15) இந்த தீர்ப்பை வழங்கியது.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, மறைந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த மற்றும் அவரின் சகோதரர் ஜகத் சமந்த மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
தாக்குதலுக்கு உள்ளான பிரதேச செயலாளருக்கு இழப்பீடாக ரூ. 10 லட்சம் வழங்குமாறும் ஜகத் சமந்தவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர் அந்த இழப்பீட்டை வழங்கத் தவறினால், கூடுதலாக 24 மாத சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.
2024 ஜனவரி 25 அன்று கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் நடந்த வீதி விபத்தில் சனத் நிசாந்த உயிரிழந்தார். இதனால், இன்று அவரின் சகோதரர் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜரானார்.


