தலைப்புச் செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நெதன்யாகு ரகசிய பயணம் மேற்கொண்டதாக அவரின் அலுவலகம் கூறியதற்கு, அமீரகம் மறுப்பு

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரின் போது, ​​இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு – ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டார் என, நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் இந்தத் தகவலை மறுத்துள்ளது.

இஸ்ரேலுடனான ஐக்கிய அரபு அமீரகத்தின் உறவுகள் பகிரங்கமானவை என்றும், நன்கு அறியப்பட்ட, பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட ஆபிரகாம் உடன்படிக்கைகளின் கட்டமைப்பிற்குள் நிறுவப்பட்டுள்ளது எனக் கூறியுள்ள ஐக்கிய அரபு அமீரகம், இந்த உறவுகள் ரகசியம் அல்லது மறைமுகமான ஏற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்றும் கூறியுள்ளது.

எனவே, ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வெளியிடப்பட்டாலன்றி, தெரிவிக்கப்படாத வருகைகள் அல்லது ஏற்பாடுகள் தொடர்பான எந்தவொரு கூற்றும் ஆதாரமற்றதாகும் என்றும் அந்த நாடு குறிப்பிட்டுள்ளது.

ஈரானுக்கு எதிரான குண்டுவீச்சுத் தாக்குதல்களுக்கு மத்தியில், ஒரு ரகசியப் பயணத்தின் போது ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் நெதன்யாகு ஒரு சந்திப்பை நடத்தியதாக, சரியான திகதியை வெளியிடாமல், நேற்று புதன்கிழமை நெதன்யாகுவின் அலுவலகம் சமூக ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.

அது வெளியாகி சில மணிநேரங்களுக்குப் பிறகு – ஐக்கிய அரபு அமீரகத்தின் மறுப்பு வெளி வந்துள்ளது.

ஈரானின் தாக்குதல்களை எதிர்கொள்ள உதவும் வகையில், இஸ்ரேல் தனது அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்புக்களையும், அதனை இயக்குவதற்கான பணியாளர்களையும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பி வைத்திருந்ததாக, இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் மைக் ஹக்கபீ இந்த வாரம் தெரிவித்திருந்தார் .

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய ஹக்கபீ, இஸ்ரேலுக்கும் வளைகுடா அரபு நாடுகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் உறவுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று பாராட்டினார்.