தலைப்புச் செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலை: துப்பாக்கி வழங்கியதாகக் கூறப்படும் கம்பஹா உஸ்மன்ட் என்பவரை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் முக்கியஸ்தரான கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும், அதற்கு உதவியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட உஸ்மன்ட் குணசேகர, என்றழைக்கப்படும் கம்பஹா உஸ்மன்ட் என்பவரை 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

பிரபலமான பாதாள உலகப் பிரமுகரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரமுகருமான சஞ்சீவ குமார சமரரத்ன என்றழைக்கப்படும் ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவரின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும், கொலையைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை வழங்கியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், உஸ்மான்ட் குணசேகர, என்றழைக்கப்படும் ‘கம்பஹா உஸ்மான்ட்’, கொழும்பு குற்றப் பிரிவால் (CCD) கைது செய்யப்பட்டார்.

கடந்த வருடம் பெப்ரவரி 19 அன்று, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திலுள்ள எண் 05 நீதவான் நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவவை சிறை அதிகாரிகள் ஆஜர்படுத்தப்பட்டபோது, ​​வழக்கறிஞர் போல் வேடமிட்ட ஒருவர் – சஞ்சீவவை சுட்டுக் கொன்றார்.

கொலை தொடர்பாக – தற்போது தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், கம்பஹாவிலுள்ள ஸ்ரீ போதி வீதி பகுதியில் நேற்று இரவு (13) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

வெளிநாடுகளில் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் இணைந்து இந்தக் கொலைச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும், கொலையைச் செய்வதற்குத் தேவையான துப்பாக்கிகளை வழங்கி – சந்தேக நபர் குற்றத்திற்கு உதவியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டபோது சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு ரிப்பீட்டர் ஷொட்கன், இரண்டு தோட்டாக்கூடுகள் மற்றும் 10 தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கம்பஹாவைச் சேர்ந்த 69 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.