தலைப்புச் செய்திகள்

டெங்கு நோயினால் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆண்டு பாதிப்பு: 12 பேர் மரணம்

நாடு முழுவதும் மொத்தம் – இந்த ஆண்டு இதுவரையிலான காலப்பகுதியில் 25,082 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, ரத்தினபுர மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும், கொழும்பு மாநகர சபைப் பகுதியிலும் அதிகபட்ச நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் டொக்டர் பிரஷில சமரவீர தெரிவித்தார்.

இந்த ஆண்டில் இதுவரை டெங்கு தொடர்பான 12 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், அது டெங்குதானா என்பதை உறுதிப்படுத்த, உடனடியாக வைத்திய உதவியை நாடுமாறு டொக்டர் சமரவீர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

வைத்தியரை நாடும் வரை, காய்ச்சலுக்கு பரசிட்டமோல் தவிர வேறு எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம் என்றும், நுளம்புக் கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, நுளம்பு விரட்டியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.