தலைப்புச் செய்திகள்

அமெரிக்க அஞ்சல் சேவைக்கு இலங்கை அனுப்பிய பணம் கிடைக்கவில்லையாம்: அமைச்சர் நலிந்த தெரிவிப்பு

இலங்கையிலிருந்து அமெரிக்க அஞ்சல் சேவைக்கு அனுப்பப்பட்ட 625,000 டொலர் பணம் தங்களுக்கு வந்து சேரவில்லை என, இலங்கை அதிகாரிகளுக்கு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, அது தொடர்பான மற்றொரு பணப்பரிவர்த்தனைப் பிரச்சினை குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

இணையவழி மோசடியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும், திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டமை பற்றிய, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், அவர் இதனைக் கூறினார்.

அஞ்சல் விவகாரம் குறித்துப் பேசிய நளிந்த ஜெயதிஸ்ஸ, குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் அஞ்சல் திணைக்களமும் இணையாக விசாரணைகளை நடத்தி வருவதாகக் கூறினார்.

இந்தப் பரிவர்த்தனைகள் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்டதாக – ஆரம்பகட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

“இலங்கை பணத்தைச் செலுத்திவிட்டது, ஆனால் அமெரிக்க அஞ்சல் சேவை தங்களுக்குப் பணம் வந்து சேரவில்லை என எங்களுக்குத் தெரிவித்துள்ளது” என்று அமைச்சர் கூறினார்.

இந்தப் பிரச்சினை குறித்த விசாரணைகள் பல வாரங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டதாகவும், முறைகேடுகள் தொடர்பான தனித்தனி சம்பவங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“இது இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதா என்பது குறித்து என்னால் கருத்துத் தெரிவிக்க முடியாது, ஆனால் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்பதை என்னால் கூற முடியும்” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.