
இலங்கையின் உள்நாட்டு வருவாய்த் வரித் திணைக்களம், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 606 பில்லியன் வரி வருவாய் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 17.7% அதிகரிப்பாகும்.
இன்றைய தினம் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், வருமான வரி, பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) உள்ளிட்ட அனைத்து முக்கிய வரிப் பிரிவுகளிலும் பங்களிப்புகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் இந்த வருவாய் வசூலிக்கப்பட்டதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொருளாதார விரிவாக்கம், வரிக் கொள்கை சீர்திருத்தங்களைச் செயல்படுத்துதல், மேம்பட்ட வரி நிர்வாகம் மற்றும் அதிகரித்த தன்னார்வ வரி இணக்கம் ஆகியவற்றால் வருவாய் வசூலில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

முதல் காலாண்டில் வசூலிக்கப்பட்ட வருவாய், 2026 ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்த வருவாய் இலக்கில் ஏறக்குறைய 25% ஆகும் என்றும் உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் கூறியுள்ளது.
மேலும், வரி செலுத்துவோர் மற்றும் பொது, தனியார் துறை நிறுவனங்களின் பங்களிப்பை திணைக்களம் பாராட்டியதுடன், ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்த வலுவான வருவாய் செயல்திறனை அடைவதற்கு, அவர்களின் ஒத்துழைப்பு உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளது.


