
அமெரிக்க ஜனாதிபதியாக இருக்க ட்ரம்ப் தகுதியற்றவர், அவர் மனம் நிலையாக இல்லை. அவர் நோயுற்றிருக்கிறார் என கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் அரசியல் விமர்சகர்கள் பலர், 25வது சட்ட திருத்தத்தை பயன்படுத்தி, ஜனாதிபதி பதவியில் இருந்து ட்ரம்பை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
உண்மையில் ட்ரம்பின் உடல் நலம் மோசமாக இருக்கிறதா? ஈரானுடனான போர் விவகாரத்தில் அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய வகையிலேயே ட்ரம்ப் பேசி வருகிறார்.
ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துவது, ஒரே நாளில் வெவ்வேறு கருத்துகளை தெரிவிப்பது என, ட்ரம்பின் சமீபத்திய நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, அவர் மனநிலை சரியில்லாதவர், நிலை தடுமாறியவர், நோயுற்று இருக்கிறார் என, அரசியல் விமர்சகர்கள் கூறியிருந்தனர்.
இவரின் இந்த குழப்பமான செயல்பாடுகளால், சொந்த கட்சியினர் மத்தியிலேயே ட்ரம்ப் எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறார். ட்ரம்பின் இந்தச் செயற்பாடுகள் நாட்டுக்கும் உலகுக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என ஆதங்கப்படும் சிலர், அமைச்சரவையோ அல்லது துணை ஜனாதிபதியோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக, 25வது சட்ட திருத்த மூலம் அவரை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு ஜனநாயகக கட்சி முயன்று வருகிறது. அமெரிக்க அரசியலமைப்பில் ஜனாதிபதியை பதிவியிலிருந்து நீக்கும் 25 வது சட்ட திருத்தத்தில் பல பிரிவுகள் உள்ளன.

அதில் குறிப்பாக நான்காவது பிரிவின் மூலம் – ஒரு ஜனாதிபதி தனது பதவியின் அதிகாரங்களையும் கடமைகளையும் நிறைவேற்ற இயலாத நிலையில் இருந்தால், அவரின் விருப்பமின்றி – அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு அதிகாரம் உள்ளது.
இதனை எழுத்துப்பூர்வமாக அறிவிக்க துணை ஜனாதிபதிக்கும் அமைச்சரவையில் பெரும்பான்மையினருக்கும் பிரிவு நான்கின் கீழ் அதிகாரம் உள்ளது.
ஆனால் 25 ஆவது சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த, அவரின் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக திரும்ப வேண்டும். நாடாளுமன்றத்தின் (காங்கிரஸ்) அங்கீகாரம் தேவைப்படும் என்பதால், ட்ரம்ப்-இன் பதவியை பறிப்பது சாத்தியமான விஷயம் இல்லை என பெரும்பாலானோர் கருத்து தெரிவிக்கின்றனர்.


