
ஆணுறை பயன்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு சமூக ஊடகப் பதிவு, இணையத்தில் சர்ச்சையையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியதை அடுத்து, சுகாதார அமைச் அதை நீக்கியுள்ளது.
அவசர கருத்தடை மாத்திரைகளை நம்புவதற்குப் பதிலாக, ஆணுறைகளைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் பொது சுகாதார பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அந்தப் பதிவு – அமைச்சின் உத்தியோகபூர்வ சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டது.
அந்தப் பதிவு தொடர்பில் வெளியிடப்பட்ட படத்தில், பாலத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஒரு குறுகிய பலகையைக் கடக்க முயற்சிக்கும் ஒரு மனிதனின் படம் இடம்பெற்றிருந்தது. இது பாதுகாப்பற்ற தேர்வுகளுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறிக்கிறது.
இருப்பினும், சமூக ஊடக பயனர்கள் விளக்கப்பட உருவம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஒத்திருப்பதாகக் கூறினர். அவர் முன்பு ஒரு பொது நிகழ்வின் போது ஒரு தற்காலிக பலகைப் பாலத்தைக் கடக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த ஒப்பீடு விரைவாக வைரலானது. மேலும், சுகாதார அமைச்சு, ஒரு பொது சுகாதார விழிப்புணர்வு செய்தியை அரசியலாக்கியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இவ்வாறு அதிகரித்து வரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், சுகாதார அமைச்சு ஆரம்பத்தில் விளக்கப்பட உருவத்தை நீக்குவதன் மூலம் வரைபடத்தை மாற்றியது. பின்னர், அந்தப் பதிவு அதன் உத்தியோகபூர்வ தளங்களில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டது.
அது அகற்றப்பட்ட போதிலும், அசல் பதிவின் ‘ஸ்கிரீன் ஷொட்’கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவின.
இந்த நிலையில், அமைச்சும் அரசாங்கமும் ஒரு அரசியல் நபரை குறிவைக்க – ஒரு பொது சுகாதார பிரச்சாரத்தைப் பயன்படுத்துவதாக விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


