தலைப்புச் செய்திகள்

மின்சார சபையின் 24 தொழிற் சங்கங்கள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை

ங்கள் கோரிக்கைகளுக்கான தீர்வுகளை வழங்காமல், இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பு செய்வதற்கான திகதியை , அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சுய விருப்பின் பேரில் ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பித்த ஊழியர்களைக் கொண்ட இருபத்தி நான்கு மின்சாரத் சபை தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

தொழிற்சங்கங்கள் – அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில், ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு எட்டு கோரிக்கைகளை சமர்ப்பித்ததாகவும், ஆனால் திருப்திகரமான பதில் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளன.

தொழிற்சங்கங்களில் பொறியாளர்கள் சங்கம், தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம், தொழில்துறை தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் மற்றும் ஐக்கிய மின்சார ஊழியர் சங்கம் ஆகியவை அடங்கும்.

கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் – அனைத்து ஊழியர் சலுகைகளையும் உறுதிப்படுத்துதல், பணம் மற்றும் பணமற்ற உரிமைகளில் வெட்டுக்கள் அல்லது பாதகமான மாற்றங்கள் ஏற்படாமையை உறுதி செய்தல், முறையான ஊழியர் பங்கேற்புடன் ஆவணங்களைத் தயாரித்தல், சம்பள ஏற்றத்தாழ்வுகளை நீக்குதல், நிலுவையில் உள்ள ஊழியர் மற்றும் நிறுவனப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் சுய விருப்பின் பேரில் ஓய்வு பெற்றவர்களுக்கு இடைநிறுத்தப்பட்ட ஓய்வூதியப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளைப் பெறுவதற்கு – தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கையைத் தவிர வேறு வழியில்லை என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜனவரி 12 அன்று அனுப்பப்பட்ட முந்தைய கடிதத்திற்கும் பதிலளிக்கப்படவில்லை என்றும், மறுசீரமைப்பு திகதி தீர்மானமின்றி வர்த்தமானியில் வெளியிடப்பட்டால் நடவடிக்கையை தீவிரப்படுத்துவதற்கான தங்கள் முடிவை வலுப்படுத்தவுள்ளதாகவம் தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டன.