தலைப்புச் செய்திகள்

17 வயது சாரதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி: எச்சரிகையை மீறி வேனை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றதாக தகவல்

சோதனைச் சாவடியில் நிற்கத் தவறியதாகக் கூறப்படும் வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 17 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை காவல் பிரிவுக்குட்பட்ட அல்லப்பிட்டி சந்திக்கு அருகே – இன்று (10) செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான வேனை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்ததாகவும், ஆனால் அந்த வாகனம் உத்தரவை மீறி – மண்டைதீவு நோக்கி வேகமாகச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தப்பியோடிய வேன் பற்றிய தகவல் ஊர்காவற்றுறைப் பொறுப்பதிகாரி பயணித்த ஜீப்பிற்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், அவர் வாகனத்தை இடைமறிக்க முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பொலிஸார், முதலில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் வான் நோக்கி சுட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆயினும் வாகனம் நிற்கத் தவறியதால், வேன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் சாரதி துப்பாக்கிச் சூட்டுக்குள்ளாகி – யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் மரணித்தார்.

இறந்தவர் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த வேனின் பின்புற இலக்கத் தகடு அகற்றப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் நடந்த நேரத்தில் வாகனத்திற்குள் இருந்த மேலும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஊர்காவற்துறை பொலிஸார் மற்றும் யாழ்ப்பாணப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.