தலைப்புச் செய்திகள்

குவைத் அரசினால் 25 டொன் ஈச்சம்பழம் இலங்கை தன்னார்வ நிறுவனங்களுக்கு அன்பளிப்பு

– அஷ்ரப் ஏ சமத் –

குவைத் அரசினால் 25 டொன் ஈச்சம்பழங்கள் – குவைத்தில் பதிவு செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 16 முஸ்லிம் தன்னார்வ நிறுவனங்களுக்கு நேற்று (08) வழங்கி வைக்கப்பட்டது.

கொழும்பு 07ல் அமைந்துள்ள குவைத் துாதரகத்தில் வைத்து – இந்த ஈச்சம் வழங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

எதிர்வரும் நோன்பு மாதத்தை முன்னிட்டு, இந்த ஈச்சம்பழங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் குவைத்திலிருந்து இலங்கை வருகை தந்துள்ள அஷ்ஷேக் மன்சூர் ஜப்பார், குவைத்தின் இலங்கைக்கான துாதரகத்தின் சார்ஜ் டி அபயார், பதில் தூதுவர் அப்துல்லாஹ் அல் முஹன்னாஸ் ஆகியோர்கள் இணைந்து 16 நிறுவனங்களின் தலைவர்களிடம் ஈச்சம் பழங்களைக் கையளித்தனர்.

இந்த ஈச்சம்பழங்கள் – பள்ளிவாசல்கள், சமுக சேவை இயக்கங்கள் ஊடாக, பிரதேச முஸ்லிம்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளன.

இங்கு உரையாற்றிய குவைத் பதில் தூதுவர் அப்துல்லாஹ் அல் முஹ்ன்னாஸ்; ”இலங்கை – குவைத் நட்புறவு திட்டத்தின் கீழ், குவைத் அரசு – இலங்கையில் இயற்கை அனர்த்தங்கள் நிவாரணங்களையும் பல்கலைக்கழகங்கள், கல்வி, வீடமைப்பு மற்றும் பாதை அபிவிருத்தி என பல்வேறு திட்டங்களுக்கு உதவி வருகின்றது.

அத்துடன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கடந்த 04 தசாப்த காலங்களாக, குவைத் நாட்டில் தொழில் செய்து வருகின்றனர். இலங்கை -குவைத் நட்புறவு கடந்த 05 தசாப்தங்களுக்கும் மேற்பட்ட காலமாக இயங்கி வருகிறது” என்றார்.