
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் – முறையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்குப் பதிலாக, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.
அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து, ஞாயிறு திவயினக்கு வழங்க பேட்டியில் – டில்வின் சில்வா இதனைக் கூறினார்.
தற்போதைய அரசாங்கத்தை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பதாகவும், பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொடர்புடைய ஆட்சி பாணியுடன் அரசியல் ரீதியாக இணைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
முன்னைய அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய இயற்கை உரக் கொள்கையைப் பற்றி குறிப்பிடுகையில், அந்த நேரத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் – கோட்டாகய ராஜபக்சவுக்கு ஆதரவளித்ததாகவும், அந்த நடவடிக்கை இறுதியில் அந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாகவும் அவர் கூறினார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் – சம்பள உயர்வுகளைக் கோருகிறது என்பதை ஒப்புக்கொண்டாலும், தற்போதைய பொருளாதார நிலைமைகளின் கீழ், அத்தகைய கோரிக்கைகளை ஏற்க முடியாது என்றும் டில்வின் சில்வா குறிப்பிட்டார்.
வைத்திய அமைப்பிற்குள் முக்கிய நிர்வாகப் பதவிகளை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சிரேஷ்டமானவர்கள் தம்வசம் வைத்திருப்பதாகவும், இது பொது சுகாதாரத் துறையில் மற்ற வைத்திய நிபுணர்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை மட்டுப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.


