தலைப்புச் செய்திகள்

ஹரினியை மாற்றுங்கள்: ஜனாதிபதிக்கு எல்லே குணவன்ச தேரர் காரசாரமான கடிதம்

பிரதமர் ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு தேசத்தைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் எல்லே குணவன்ச தேரர் கடிதம் அனுப்பியுள்ளார்.

பிரதமரின் தலைமையின் கீழ் முன்மொழியப்பட்ட ஒருதலைப்பட்ச கல்வி சீர்திருத்தங்கள் – தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டிற்கும், அதன் மக்களுக்கும், பௌத்த ஒழுங்கிற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக தேரர் ஜனாதிபதிக்கு எழுதிய குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தேசம் மற்றும் அதன் குடிமக்கள் மீது சிறிதும் அக்கறை காட்டாத அரசாங்கம், நாட்டிற்கும் பொதுமக்களுக்கும் நேரடியாக தீங்கு விளைவிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லாததையும் தேரர் விமர்சித்துள்ளார். மேலும் பௌத்த பிக்குகள், பிற மதங்களின் மதகுருமார்கள், ஆசிரியர்கள் அல்லது கல்வி நிபுணர்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்முறை, அடிப்படையில் குறைபாடுடையது என்றும், எனவே அது செல்லுபடியாகாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதை சுட்டிக்காட்டுவது ஒரு பௌத்த துறவியாக தனது வரலாற்று கடமை என்று விவரித்துள்ள தேரர், அரச தலைவராக ஜனாதிபதி அனுர திசாநாயக்க, நாட்டையும், மக்களையும், பௌத்த தர்மத்தையும் இந்த ஆபத்திலிருந்து பாதுகாக்க விரைவான நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளா்.