
– அஹமட் –
கல்முனை பிராந்தியத்திலுள்ள அரச வைத்தியசாலைகளில், கடமையில் இருந்து கொண்டு – பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு மறுத்து வரும், வைத்தியர்களுக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் முறைப்பாடு செய்துள்ளார்.
பாலமுனை அரச வைத்தியசாலைக்கு அவர் இன்று (09) சிகிச்சை பெறுவதற்காக சென்றிருந்த போது, அங்கு வைத்தியர்கள் கடமையில் இருந்து கொண்டு, சிகிச்சை வழங்க மறுத்தமையினை அடுத்து, அவர் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் கல்முனை பிராந்தியத்தில் நேற்று முன்தினம் தொடக்கம், அதாவது மூன்று நாட்களாக பணிப் புறக்கணிப்பில் ஈபட்டு வருகின்றனர்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிருக்கு எதிராக – சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இந்தப்பணிப் புறக்கணிப்பை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் சட்டத்தரணி அன்சில் ‘புதிது’ செய்தித்தளத்திடம் பேசுகையில்; “வைத்தியர்களிடையே பிரச்சினைகள் இருந்தால், அதனை நிர்வாக ரீதியாக தீர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது அவர்களின் திணைக்களம், அமைச்சுக்கு முறையிட்டு தீர்வைப் பெறலாம். அப்படிச் செய்யாமல், பணி செய்ய மறுத்து – மக்களின் உயிருடன் விளையாடக் கூடாது.

கடந்த மூன்று நாட்களும் வைத்தியசாலையில் கடமையில் இருந்து கொண்டு பணிப் புறக்கணிப்பில் ஈடுபடும் அனைத்து வைத்தியர்களும் – பணி செய்யாத நாட்களுக்கான சம்பளத்தைப் பெறுகின்றார்கள். ஆனால், மக்களுக்கு சிகிச்சை வழங்க மறுக்கின்றார்கள். இது அநீதியான நடவடிக்கையாகும். தற்போது மழைக்காலம் என்பதால், கணிசமானோர் நோய்வாய்ப்பட்டு – சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைகளுக்கு வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்க மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மேலும், பணிப் புறக்கணிப்பில் ஈடுபடும் வைத்தியர்கள் – பின்னேரங்களில் அவர்களின் தனியார் சிகிச்சை நிலையங்களைத் திறந்து வைத்துக் கொண்டு, மக்களிடம் பணம் பெற்றுக் கொண்டு – சிகிச்சை வழங்குகின்றனர். இது மனச்சாட்சியற்ற செயலாகும்.
மேலும், நாட்டில் அவசரநிலை உள்ளபோது, வைத்திய சேவை – அத்தியவசியமாக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் தனி நபர் ஒருவருக்கு எதிராக, பணிப் புறக்கணிப்பில் ஈடுபட முடியாது.
ஆகவே, கல்முனைப் பிராந்தியத்தில் கடமையில் இருந்து கொண்டு – கடந்த மூன்று நாட்களாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டமையின் மூலம், பொதுமக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்திய அனைத்து வைத்தியர்களுக்கும் எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி, பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளேன்” என்றார்.
சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமாவார்.
சட்டத்தரணி அன்சிலுடன் இணைந்து ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக், எம்.என். பௌசான், எம்.ரி. இம்தியாஸ் மற்றும் எம்.எச். அப்துல் மனாப் ஆகியோரும் இணைந்து முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.


தொடர்பான செய்தி: புஸ்வானமானது பணிப் புறக்கணிப்பு: வழமைபோல் இயங்குகிறது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை


