
– அஹமட் –
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் – கல்முனைப் பிராந்திய வைத்தியசாலைகளில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றதாகத் தெரிவித்துள்ள நிலையில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பணிகள் வழமைபோல் நடைபெற்று வருகின்றன.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் மீது, அவ்வப்போது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றமை வழமையாகும். சில காலங்களுக்கு முன்னர் – அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரித்த சுகாதார அமைச்சு, அவை பொய்யெனக் கண்டறிந்த பின்னர், அவரை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு நிரந்தரமாக நியமித்தது.
சிலரின் தேவைகளுக்காகவும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அம்பாறை மாவட்ட பிரதிநிதிகள் சிலரின் தனிப்பட்ட கோபங்களை முன்னிறுத்தி – பழி தீர்ப்பதற்காகவும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜவாஹிருக்கு எதிராக – ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
குறிப்பாக, வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற வைத்தியர்களுடன் வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிர் மோசமாக நடந்து கொள்கிறார் என்கிற குற்றச்சாட்டு தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றுவோர், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பையும் கவனத்தில் கொள்ளாது, நேற்றும் இன்றும் தங்கள் கடமைகளை வழமை போல் சிறப்பாக செய்து வருகின்றனர்.

ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைக்காக – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவையாகும்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக டொக்டர் ஜவாஹிர் பொறுப்பேற்ற பின்னர் – அந்த வைத்தியசாலை சிறப்பாக இயங்கி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையிலேயே, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த டொக்டர் ஜவாஹிருக்கு எதிரான இந்த நடவடிக்கைகளில் – பிரதேசவாதம் கொண்ட ஒரு சிலரும் கைகோர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இருந்த போதும், சில தினங்களுக்கு முன்னர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக 10, 15 பேர் கூடி நின்று நடத்திய ஆர்ப்பாட்டத்தை, அக்கரைப்பற்று மக்கள் புறக்கணித்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.




