தலைப்புச் செய்திகள்

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி செய்தோரிடமிருந்து 374 மில்லியன் ரூபாய் மீட்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் 2025 ஆம் ஆண்டில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் உரிமம் பெறாத வேலைவாய்ப்பு நிறுவனங்களிடமிருந்து ரூ. 374 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மீட்டெடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் நெலும் சமரசேகரவின் அறிவுறுத்தலின் பேரில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனைகள் மற்றும் நிறுவனத்தால் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் தொடங்கப்பட்ட விசாரணைகளுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளின் மூலம், இந்தத் தொகை மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி செய்பவர்களுக்கு எதிராக மொத்தம் 791 நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதே நேரத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான 4,734 புகார்கள் அதே காலகட்டத்தில் பெறப்பட்டன.

பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு இந்த ஆண்டில் 20 சோதனைகளை மேற்கொண்டது. இதில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட இரண்டு உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் அடங்கும். இதன் விளைவாக, உரிமம் பெற்ற நிறுவனங்களுடன் தொடர்புடைய 15 நபர்கள் உட்பட 121 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியைத் தடுப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்த, சிறப்புப் பயிற்சி பெற்ற அதிகாரிகளைக் கொண்ட ஒரு சிறப்பு காவல் பிரிவு கடந்த ஆண்டு பணியகத்திற்குள் நிறுவப்பட்து.

புகார்கள் உடனடியாகவும் வெளிப்படையாகவும் தீர்க்கப்படுவதையும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கும் சமூக ஊடக தளங்கள் மூலம் நடத்தப்படும் மோசடிகள் அதிகரித்து வருவதால், எந்தவொரு தனிநபரிடமோ அல்லது நிறுவனத்திடமோ பணம் அல்லது கடவுச்சீட்டுகளை ஒப்படைப்பதற்கு முன்பு, பணியகத்தின் 1989 உடனடி தொலைபேசிச் சேவையை அழைப்பதன் மூலம் தகவல்களைச் சரிபார்க்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வேலை தேடுபவர்களை கேட்டுள்ளது.