
பாடசாலை மாணவர்களுக்கான தரம் 6 பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்தை மறுஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட உள்ளகக் குழு, தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (040 பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், குழுவின் கண்டுபிடித்த விடயங்களின் அடிப்படையில் – இந்த பிரச்சினை தொடர்பாக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
சர்ச்சைக்குரிய உள்ளடக்கம் உடனடியாக நீக்கப்படும் என்றும், தற்போதைய கல்வி சீர்திருத்தங்கள் மிகவும் பயனுள்ளதாகவும், பொருத்தமான முறையிலும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யவும் கல்வி அமைச்சு விரைவான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கல்வி சீர்திருத்தங்கள் ஒரு கூட்டு முயற்சி என்றும், அரசாங்கத்தின் பகிரப்பட்ட பொறுப்பு என்றும், இது நாட்டின் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நலன்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது என்றும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
இந்த விஷயத்தில் பிரதமரை குறிவைத்து எழுந்த விமர்சனங்களை நிராகரித்த அவர், இதுபோன்ற தாக்குதல்கள் குறுகிய அரசியல் அல்லது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களால் இயக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.
”தேசிய கல்வி ஆணைக்குழுவினால் வகுக்கப்பட்ட கொள்கைகளுக்கு ஏற்ப, தேசிய கல்வி நிறுவனத்தால் சீர்திருத்தங்கள் உருவாக்கப்பட்டு – கல்வி அமைச்சின் மூலம் செயல்படுத்தப்பட்டன. இருப்பினும், செயல்படுத்தல் செயல்பாட்டின் போது குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன” என அமைச்சர் ஒப்புக்கொண்டார்.

06 ஆம் வகுப்பு பாடத்திட்டத்துடன் தொடர்புடைய புத்தகதத் தொகுதியில், ஒரு கடுமையான பிழை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதை அமைச்சு இப்போது தெளிவாக அங்கீகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிழை அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தகவல்களைச் சேகரித்து இந்த விஷயத்தை ஆராய – பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் உடனடியாக உள் குழுவொன்று நியமிக்கப்பட்டது. குழுவின் அறிக்கை இப்போது கிடைக்கப் பெற்றுள்ளது.
கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், பிழைக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜித ஹேராத் கூறினார்.
சர்ச்சைக்குரிய உள்ளடக்கம் 6 ஆம் வகுப்பு பாடத் தொகுதியில் ஒருபோதும் சேர்க்கப்படக்கூடாது என்றும், சீர்திருத்த செயல்முறையை வலுப்படுத்த மேலும் திருத்த நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் அதே வேளையில், கல்வி அமைச்சு அதை தாமதமின்றி நீக்க முடிவு செய்துள்ளது என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.


