
நாடாளுமன்ற ஓய்வூதியத்தை ரத்துச் செய்யும் சட்டமூலம் இன்று (04) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சட்ட மூலம் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை ரத்து செய்யவுள்ளது.
இந்த சட்டமூலமானது, தற்போது நடைமுறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களின் ஓய்வூதிய உரிமைகளை ரத்து செய்யவுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, நாடாளுமன்ற ஓய்வூதிய (ரத்து செய்தல்) வரைவு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் பரிசீலித்து, ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத் திட்டத்தை இல்லாமலாக்கும் வரைவுச் சட்டமூலத்தை, அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியதோடு, சட்டமா அதிபரிடமிருந்தும் ஒப்புதலைப் பெற்றது.
ஜூன் 16, 2025 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 1971 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை ரத்து செய்வதற்கு அமைச்சரவை கொள்கை அளவில் அனுமதி வழங்கியது.


