
கொழும்பு மாநகர சபையின் பட்ஜட்டை ஆதரித்து வாக்களித்தார் எனும் குற்றச்சாட்டை முன்னிறுத்தி, அந்த சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஸொஹரா புகாரியை, கட்சியிலிருந்து இடைநிறுத்துவதாக, கட்சியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், குறித்த உறுப்பினருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தின் முழு விவரம் வறுமாறு;
கொழும்பு மாநகர சபையின் பட்ஜட்டை எதிர்க்கட்சியின் ஒரு பகுதியாக, முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கும் என தெளிவான முடிவைக் கொண்டிருந்த போதிலும், கொழும்பு மாநகர சபையின் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுக்கு ஆதரவாக நீங்கள் வாக்களித்ததாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது, மேலும் ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.
வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்கும் முடிவை கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம், நீங்கள் கலந்து கொண்ட குழுக் கூட்டத்தில் அறிவித்திருந்தார். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியின் நிலைப்பாட்டை முழுமையாக அறிந்திருந்தும், கட்சித் தலைமையின் வெளிப்படையான அறிவுறுத்தல்களுக்கு நேர் எதிரான வகையில் நீங்கள் செயல்பட்டுள்ளீர்கள்.
அதனால் உங்கள் நடத்தை கட்சி ஒழுக்கத்தை கடுமையாகவும் மீறியுள்ளத. மேலும் இது மிகுந்த கவலையுடன் பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம், உங்கள் கட்சி உறுப்பினர் பதவி – உடனடியாக இடைநிறுத்தப்படுகிறது என்பதை உங்களுக்குத் தெரிவிக்குமாறு எனக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், உங்கள் கட்சி உறுப்பினர் பதவி நீக்கம் உட்பட, உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு, ஒரு பிரமாணப் பத்திரம் மூலம் உங்கள் விளக்கத்தை சமர்ப்பிக்குமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இந்தக் கடிதம் பெறப்பட்ட நாளிலிருந்து ஒரு (01) வாரத்திற்குள் அத்தகைய பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் இணங்கத் தவறினால், மேலும் அறிவிப்பு இல்லாமல் மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்’.


