
நாட்டில் இன்று (29) தொடக்கம் அதிக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்க நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) ஆகியவற்றுடன் இணைந்து அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் தீவுகளுக்கு அருகிலுள்ள வளிமண்டலக் குழப்பம் காரணமாக வடக்கு, வடமத்தி, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் 50 மில்லிமீற்றர் முதல் 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது என, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் மதிப்பீட்டில் உள்ளவர்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றாலும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் தகவலின்படி, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அனைத்து அதிகாரிகளுக்கும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் அவசர உதவிகளுக்கு பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.


