தலைப்புச் செய்திகள்

துப்பாக்கி கை மாற்றப்பட்ட விவவாகரம் தொடர்பில், டக்ளஸை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியொன்று, பாதாள உலக குற்றவாளியொருவருக்கு கைமாற்றப்பட்டது எனும் குற்றச்சாட்டின் பேரில் நேற்று (26) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, மேலும் விசாரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேவானந்தாவை கைது செய்த சிஐடி-யினர் இன்று (27) கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

2001 ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இலங்கை ராணுவத்தினர், அவரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக துப்பாக்கியொன்றை வழங்கியிருந்தனர்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘மாகந்துரே மதுஷ்’ என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்குப் பிறகு, அந்தத் துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில், முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி – வெலிவேரிய – காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆயுதத்தின் தொடர் எண்ணை சரிபார்த்தபோது, ​​சம்பந்தப்பட்ட துப்பாக்கி டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்டது என்பது தெரியவந்தது.