
தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுக்கும், சூரியகந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் இடையில் அடிபிடி நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
தாக்குதலுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது எம்பிலிப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் – டிசம்பர் 20 ஆம் திகதி இரவு பணியில் இருந்து வீடு திரும்பும் போது, மேற்படி நாடாளுமன்ற உறுப்பினருடன் மற்றும் சில நபர்கள் வழி மறித்து தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் தாக்குதலுக்கு முன்னர் – அந்தக் குழுவினர் வாகனத்தில் வந்து கொலை மிரட்டல் விடுத்ததாக முறைப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 16 ஆம் திகதி சூரியகந்த பொலிஸார் நடத்திய கஞ்சா தேடுதலையடுத்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சோளம் மற்றும் மரவள்ளிக்கிழங்கு தோட்டத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளை அன்றைய தினம் கைப்பற்றியது. அந்தக் குழுவில் மேற்படி பொலிஸ் உத்தியோகத்தரும் இருந்தார்.
கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்ட காணி – சாந்த பத்மகுமாரவின் மாமனாருக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. அவர் நபரொருவருக்கு பயிர்ச் செய்கைக்காக தனது காணியை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கஞ்சா செடி சோதனையைத் தொடர்ந்து, எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றம், சந்தேக நபருக்கு ரூ.3,000 அபராதம் விதித்தது. மேலும்,ஆரம்ப அறிக்கையின்படி, அந்தக் காணி பத்மகுமாரவுக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
இதேவேளை. குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார – பொலிஸ் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார். மேலும் நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழுவிலும் புகாரளித்துள்ளார்.
மேலும் கஞ்சா சம்பவத்துடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், சோதனையில் தனது பெயரை இணைத்து வதந்தியை பரப்பியவர் சூரியகந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிதான் எனவும் சாந்த பத்மகுமார தெரிவித்துள்ளார்.


