தலைப்புச் செய்திகள்

அவுஸ்ரேலிய கடற்கரையில் நடந்த யூதர்களின் நிகழ்வில் துப்பாக்சிச் சூடு: 10 பேர் பலி

அவுஸ்ரேலியாவின் – சிட்னியின் போண்டி கடற்கரையில் (Bondi Beach) இரண்டு பேர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 09 பேர் கொல்லப்பட்டனர்.

“பத்து பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது, இவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரும் அடங்குகின்றார் என நம்பப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் மற்றைய நபர் ஆபத்தான நிலையில் உள்ளார்.மேலும் 11 பேர் காயமடைந்தனர் எனக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் தொடர்பில் அல் ஜசீரா ஒளிபரப்பிய காட்சிகளில்; அருகில் இருந்த ஒருவர் சந்தேக நபர்களில் ஒருவரைத் தாக்கி அவரது துப்பாக்கியைப் பறிக்கின்றார். பின்னர் சந்தேக நபர் நடந்து செல்கிறார்.

அதே வீடியோவில், சுமார் 50-100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பாலத்தில் ஆயுதம் ஏந்திய மற்றொரு நபர், அருகில் இருந்தவரை நோக்கிச் சுடுவதைக் காணலாம்.

தாக்குதல் நடந்தபோது கடற்கரையின் வடக்கு முனைக்கு அருகிலுள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் யூதர்களின் ஹனுக்க (hanukah) எனும் நிகழ்வு தொடங்கியதாக அவுஸ்ரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அந்த ஊடகத்தின் ஒளிபரப்பாளர் தெரிவிக்கையில்; பாலத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு கருப்பு உடையணிந்த ஆயுதமேந்திய நபர்கள் நிகழ்விற்காக கூடியிருந்த கூட்டத்தினரை நோக்கி – துப்பாக்கியால் சுட்டதாக கூறினார்.

இந்த நிலையில், ஜெருசலேமில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்; ஹனுக்க கொண்டாட்டங்களை இலக்காகக் கொண்ட கொடூரமான துப்பாக்கிச் சூடு தாக்குதலைக் கண்டித்தார்.

“ஹனுக்கவின் முதல் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கச் சென்ற யூதர்கள் மீது, மிகவும் கொடூரமான தாக்குதலை பயங்கரவாதிகள் மேற்கொண்டுள்ளனர்” என்று ஹெர்சாக் கூறினார்.

“அவுஸ்ரேலிய சமூகத்தை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய யூத எதிர்ப்பு அலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் போராடவும் அவுஸ்ரேலியாவை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவிலுள்ள இஸ்லாமிய அமைப்பொன்று, போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டை ஒரு கொடூரமான வன்முறைச் செயல் என்று கண்டித்துள்ளது.