
சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு, தாக்கப்பட்டு, நியாயமான காரணமின்றி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் மூலம், அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட ஒரு விவசாயிக்கு இழப்பீடு வழங்குமாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் 05 பேருக்கு நீதிமன்றம் நேற்று (10) உத்தரவிட்டது.
அதன்படி, நொச்சியாகம பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி உட்பட 05 05 பொலிஸார், தங்கள் சொந்த பணத்தில் இருந்து 09 லட்சம் ரூபாயை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது.
நொச்சியாகம பிரதேசத்தைச் சேர்ந்த பண்ணை உரிமையாளரும் 02 குழந்தைகளின் தந்தையுமான டி.எம். லக்ஷ்மன் தென்னகோன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை பரிசீலித்த நீதியரசர்கள் எஸ். துரைராஜா, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.

நொச்சியாகம பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் ஜெயதிலக, பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.எஸ்.சி. ரத்நாயக்க, சார்ஜன்ட் ரத்நாயக்க, சார்ஜன்ட் அசேல மற்றும் கொன்ஸ்டபிள் பண்டார ஆகியோரருக்கு, இவ்வாறு இழப்பீடு வழங்குமாறு உத்தவிடப்பட்டது.
ஜூன் 01, 2020 அன்று நண்பகல் 12.00 மணியளவில் தென்னகோன் தனது பண்ணைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவர் கைது செய்யப்பட்டு, மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு, தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தீர்ப்பை வழங்கிய நீதியரசர் குமுதுனி விக்ரமசிங்க, மற்ற நீதியரசர்களின் ஒப்புதலுடன், மனுதாரரின் அடிப்படை உரிமைகளை பொலிஸார் மீறியுள்ளனர் எனக் கூறினார்.
சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க, சட்டமா அதிபருக்காக ஆஜரானார். அதே நேரத்தில் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, சட்டத்தரணி அரிந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் மனுதாரரைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.


