
சித்திரவதை மற்றும் இழிவு செய்யப்பட்டமைக்கு ஆளான ஊடகவியலாளர் ஒருவருக்கு 75,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு, அலவ்வ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டது.
இந்த மூன்று அதிகாரிகளும் தங்கள் தனிப்பட்ட நிதியிலிருந்து அந்தத் தொகையை செலுத்த வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது, பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, பிரியந்த பெனாண்டோ மற்றும் சம்பத் அபயகோன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு, இந்த சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணை நடத்தி, பிரதிவாதிகள் மீது குற்றவியல் நடவடிக்கைகளை எடுப்பது குறித்து பரிசீலிக்குமாறும் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது.

மனுதாரர் திலின ராஜபக்ஷ, தனியார் வானொலி நிலையத்தில் நிர்வாக தொகுப்பாளர்/தயாரிப்பாளராக இருந்தார். மார்ச் 1, 2021 அன்று தனது சொந்த ஊரான பொல்கஹவெலவில் இருந்து, தனது மோட்டார் சைக்கிளில் கொழும்புக்குத் திரும்புவதற்காக வலகும்புர – அலவ்வ பகுதியை நெருங்கும் போது பொலிஸாரால் நிறுத்தப்பட்டார்.


