
தனது அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்த அறிவுறுத்துவது மட்டுமே அவருக்கும் கெஹல்பத்தர பத்மேவுக்கும் இடையிலான ஒரே தொடர்பு என்று, பியூமி ஹன்சமாலி இன்று (22) தெரிவித்துள்ளார்.
பாதாள உலகக் குற்றவாளியான மண்டினு பத்மசிறி பெரேரா அல்லது கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக நேற்று (21) பியூமி ஹன்சமாலியை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரித்தனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்ட புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதுதான் முதன்முதலில் கெஹல்பத்திர பத்மேவை சந்தித்ததாக, பியூமி ஹன்சமாலி ஒரு பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
‘நான் மார்ச் 2022 இல் துபாயில் ஒரு புத்தாண்டு கொண்டாட்டத்திற்குச் சென்றேன், அங்குதான் நான் முதலில் கெஹல்பத்தர பத்மே என்ற நபரைச் சந்தித்தேன். இப்போது எல்லோரும் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அங்கு இருந்தார். என்னுடன் புகைப்படங்கள் கூட எடுத்துக்கொண்டார். அந்த நேரத்தில், அவர் அழகாக மாற விரும்புவதாகக் கூறினார். எனவே, எனது தயாரிப்புகளைப் பயன்படுத்தச் சொன்னேன். அவர் அதைச் செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அதன் பிறகு அவர் மிகவும் அழகாக இருந்தார்’ என்று பியூமி ஹன்சமாலி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கெஹல்பத்தர பத்மேவுடன் – நிதி பரிவர்த்தனைகள் குறித்து சிஐடி அதிகாரிகள் தன்னிடம் விசாரித்ததாகவும் பியூமி ஹன்சமாலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

‘ஒருபோதும் இல்லை. போதைப்பொருள், சட்டவிரோத வணிகங்கள் அல்லது மோசமான பணத்தில் ஈடுபட்ட எவரிடமிருந்தும் – நான் ஒருபோதும் பணம் வாங்கியதில்லை. நான் என் சொந்தக் காலில் நிற்கின்ற ஒருவர். என் வாழ்க்கையை நானே கட்டமைத்தேன். எனக்கென்று ஒரு நிறுவனம் இருக்கிறது. எனவே எனக்கு எந்த பாதாள உலக நபரின் பணமும் தேவையில்லை. அந்த மாதிரியான கூட்டத்தினருடன் நான் சிக்கலில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. அந்த விஷயங்களுக்கு நான் உண்மையிலேயே பயப்படுகிறேன். நான் சத்தியம் செய்கிறேன்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்தே – தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.



