தலைப்புச் செய்திகள்

தாய்மாருடன் சிறையில் இருக்கும் 38 பிள்ளைகள் தொடர்பில் தகவல்

பெண்கள் 38 பேர், இந்த ஆண்டின் முதல் 08 மாதங்களில் தங்கள் பிள்ளைகளுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று, பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போது 38 பிள்ளைகள் தங்கள் தாய்மார்களுடன் சிறைச்சாலைகளுக்குள் வசித்து வருகின்றனர் என்றும், இவர்களில் 15 பேர் ஆண் பிள்ளைகள் என்றும், 23 பேர் பெண் பிள்ளைகள் எனவும் அவர் கூறினார்.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை – தாய்மார்களுடன் பராமரிக்க சிறைச்சாலைகளின் பெண்கள் பிரிவுகளுக்குள் ‘குழந்தை பராமரிப்பு மையங்கள்’ நிறுவப்பட்டுள்ளன என்று அவர் விளக்கினார்.

இந்த வசதிகள் மற்ற கைதிகளிடமிருந்து தனியாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகள் தங்கள் தாய்மார்களுடன் பாதுகாப்பாக நேரத்தை செலவிட முடியும் எனவும் அவர் விவரித்தார்.

கைதிகளுக்கு வழங்கப்படும் தினசரி உணவுக்கு கூடுதலாக, சிறைச்சாலை நலப் பிரிவு இளம் குழந்தைகளுக்குத் தேவையான பால் மா மற்றும் இலகு உணவுகளையும் வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக, குழந்தைகளுக்கு கல்வி நடவடிக்கைகளை வழங்குவதற்காக – ஒரு தனியார் அமைப்பின் ஆதரவுடன், முன் குழந்தைப் பருவ மேம்பாட்டு மையம் – சிறைச்சாலைகளுக்குள் செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: 425 பெண்களுக்கு இந்த வருடம் சிறைத் தண்டனை: பிரதமர் ஹரினி தெரிவிப்பு