தலைப்புச் செய்திகள்

சம்பளம் அதிகரிக்கப்படாத ஓய்வூதியர்களுக்கு 2026இல் சலுகைகள் கிடைக்கும்: அமைச்சர் சந்தன உறுதி

2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சம்பளம் அதிகரிக்கப்படாத கணிசமான எண்ணிக்கையிலான ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள், 2026ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தில் உரிய சலுகைகளைப் பெறுவார்கள் என்று, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டொக்டர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.

‘வலிமை, நல்ல ஆரோக்கியம் மற்றும் தைரியத்தால் நிரப்பப்பட்ட வாழ்க்கை’ என்ற தலைப்பில் ஓய்வூதியத் திணைக்களம் ஏற்பாடு செய்த ‘தேசிய ஓய்வூதியதாரர்கள் தினம் 2025’ கொண்டாட்டத்தில் பங்கேற்றபோது, அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

“07 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வுபெற்றவர்களைக் கொண்ட சமூகத்தைப் பாதிக்கும் பல பிரச்சினைகள் இருப்பதை நாங்கள் அறிவோம். ஓய்வுபெற்ற அமைப்புகளை நாங்கள் தொடர்ந்து சந்தித்து – பிரதி அமைச்சர், செயலாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோர், அவர்களின் கவலைகளைத் தீர்க்க கலந்துரையாடுகிறோம். இன்னும் சில பிரச்சினைகள் நாம் அடையாளம் காணாதிருக்கலாம். இருப்பினும், உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறுப்பை நிறைவேற்ற அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது” என்றார்.

இந்த கொண்டாட்டத்தில் உள்ளூர் மற்றும் மேற்கத்திய வைத்திய சிகிச்சைகள், சுகாதார விழிப்புணர்வு சொற்பொழிவுகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் மூத்த கலைஞர்களின் அழகியல் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமிந்த ஹெட்டியாராச்சி, அத்துடன் மூத்த கலைஞர்கள், வைத்திய நிபுணர்கள், ஓய்வூதியத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.