
ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர், அவவரைப் பின்தொடர்ந்த வாகனத்தில் ‘கஜ்ஜா’ எனும் அருணா விதானகமகே இருந்தார் என்பதை, குற்றப் புலனாய்வுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
தாஜுதீன் கொலை தொடர்பான 13 ஆண்டுகால விசாரணையில் இது ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தாஜுதீனின் மரணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவரின் காரைப் பின்தொடர்ந்த வாகனத்தில் ‘கஜ்ஜா’ எனப்படும் அருணா விதானகமகே இருந்துள்ளார்.
தாஜுதீனை பின்தொடர்ந்து வந்த ஜீப்பில் காணப்பட்ட நபரை அடையாளம் காண்பதற்காக, சில சிசிரிவி காட்சிகளை கஜ்ஜாவின் மனைவியிடம் புலனாய்வாளர்கள் வழங்கியபோது, அதில் இருப்பவர் தனது கணவர்தான் என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மித்தெனியவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சில மாதங்களுக்கு முன்னர் கஜ்ஜா கொல்லப்பட்டார்.
சம்பவ இடத்தில் இருந்த நபரொருவர் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட போதிலும், கொலைக்கு நேரடியாகப் பொறுப்பான நபரை இன்னும் உறுதியாக அடையாளம் காண முடியவில்லை என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் உறுதிப்படுத்தும் ஆதாரங்களைப் பெறுவதற்காக, சம்பவத்தில் ஈடுபட்ட பிற நபர்களை அடையாளம் காணும் பொருட்டு, விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.


