
இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சிறுநீரக நோய்களால் சுமார் 1,600 பேர் மரணமடைகின்றனர் என்று, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
அதாவது, சராசரியாக தினமும் ஐந்து பேர் சிறுநீரக நோயினால் இறக்கின்றனர்.
நாள்பட்ட சிறுநீரக நோய்மற்றும் நீண்டகால சிறுநீரக செயலிழப்பு ஆகியவை சிறுநீர் வெளியேற்றத்தைக் குறைத்து, உடலின் அதிகப்படியான திரவத்தை வெளியேற்ற இயலாமைக்கு வழிவகுக்கும். இது பல சிக்கல்களைத் தூண்டும் என்று ஆலோகசரும் சமூக வைத்தியருமான டொக்டர் சிந்த குணரத்ன கூறியுள்ளார்.

சிறுநீரக நோய் ரத்த சிவப்பணு உற்பத்தியையும் சீர்குலைக்கிறது. விட்டமின் டி அளவைக் குறைக்கிறது மற்றும் ரத்த அழுத்த ஒழுங்குமுறையில் தலையிடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சிறுநீரகம் தொடர்பான நோய்களின் உலகளாவிய அதிகரிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 10 பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படலாம் என்று அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
2050 ஆம் ஆண்டளவில், சிறுநீரக நோய்கள் உலகளவில் மரணத்திற்கு ஐந்தாவது முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும், உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.



