
– அஹமட் –
அக்கரைப்பற்றில் சுமார் 05 கிலோகிராம் கஞ்சாவை நேற்று (08) இரவு 7.20 மணியளவில் பொலிஸார் கைப்பற்றியதுடன், சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த தொகை கஞ்சாவை சந்தேக நபர் – மோட்டார் பைக்கில் கொண்டு சென்ற போது, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் யூ.எல்.எஸ். ஆப்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைது செய்தனர்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆண் ஒருவரே – இவ்வாறு பெருந்தொகை கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், நீண்ட காலமாக யாழ்ப்பாணம் மற்றும் கொழும்புவிலிருந்து கஞ்சாவை பெருந்தொகையில் கொண்டு வந்து, அக்கரைப்பற்று உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்பவர் என, விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த நபரை கஞ்சாவுடன் கைது செய்த பொலிஸார், பின்னர் அவரின் வீட்டிலும் தேடுதல் நடத்தினர்.
இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் அதனைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்திய மோட்டார் பைக் ஆகியவற்றுடன், அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் (09) சந்தேக நபர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவை நீதிமன்றில் பெறவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.





