தலைப்புச் செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுக்கான ரசாயனங்கள் சிக்கிய இடத்தில், வெடிபொருட்கள் கண்டெடுப்பு

‘ஐஸ்’ போதைப்பொருள் உற்பத்திக்கான ரசாயனப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட ஹம்பாந்தோட்டை, மித்தெனி – தவாவ பகுதியிலுள்ள இடத்தில் வெடிமருந்துகள் மற்றும் கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்..

குறித்த இடத்திலுள்ள ஒரு மரவள்ளித் தோட்டத்திற்கு அருகில் புதிதாக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து இந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்படுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்களில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்து கைக்குண்டுகள் குண்டுகள், ரி-56 துப்பாக்கிக்கான 17 ரவைப்பட்டிகள் மற்றும் 12-துளை துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் மூன்று தோட்டாக்கள் அடங்குகின்றன.

மித்தெனியவில் ‘ஐஸ்’ போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கூறப்படும் ரசாயனங்கள் சமீபத்தில் மீட்கப்பட்டன.

இது தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சியின் அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டார்.

மித்தெனிய – தலாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ‘ஐஸ்’ உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் சுமார் 50,000 கிலோகிராம் ரசாயனங்கள் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கு வடக்கு குற்றப்பிரிவு நேற்று (05) நடத்திய நடவடிக்கையின் போது இந்த ரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பியல் மனம்பேரியும் அவரின் சகோதரர்கள் இருவரும் இந்த ரசாயனங்களை மறைத்து வைத்துள்ளனர். அவர்கள் – பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி ‘கெஹல்பத்தர பத்மே’வின் நெருங்கிய கூட்டாளிகள் என்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ‘பேக்கோ சமன்’ என்ற சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘ஐஸ்’ உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களை ‘கெஹெல்பத்தர பத்மே’ நாட்டிற்கு இறக்குமதி செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, பியல் மனம்பேரியின் சகோதரர் சம்பத் மனம்பேரியின் கட்சி உறுப்புரிமையை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.