தலைப்புச் செய்திகள்

பெண் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் இலங்கைக்கு உலகளவில் 135ஆவது இடம்

பெண் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் இலங்கை உலகின் 193 நாடுகளில் 135வது இடத்தில் உள்ளதாக, உலக பொருளாதார மன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் ஆகியவை தெரிவித்துள்ளன.

பாலினம் தொடர்பான பாகுபாட்டு பற்றிய நிகழ்வொன்றில், இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடு குறித்து – பல்வேறு நிபுணர்கள் தங்கள் ஆராய்ச்சியை முன்வைத்தனர். இலங்கையில் நடந்து வரும் பாலின ஏற்றத்தாழ்வு மற்றும் பெண்களின் நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த நிகழ்வின் நோக்கமாகும்.

நாடாாளுமன்றில் தற்போது 22 பெண் உறுப்பினர்கள் உள்ளனர். இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலன பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகை இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, அங்கு உரையாற்றுகையில்; “அனைத்துப் பெண்களும் பாதுகாப்பாக இருக்கும் வரை, எந்தப் பெண்ணும் பாதுகாப்பாக இல்லை” என்று கூறினார். பெண்களையும் அவர்களின் நல்வாழ்வையும் பாதுகாக்கும் வலுவான சட்டங்களை அமல்படுத்துவது குறித்தும் பிரதமர் அங்கு பேசினார்.

குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகள் போன்ற -பெண்களின் ஊதியம் பெறாத வேலைகள், அவர்களின் 20 வயதுகளில் உச்சகட்ட தொழிலாளர் வருமானத்தில் 40 சதவீதத்தை ஈட்டுகின்றன என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் குறிப்பிட்டுள்ளது. அதாவது, வருமான நிலைகளுடன் ஒப்பிடும்போது பெண்கள் ஊதியம் பெறாத வேலை மூலம் அதிகமாக உழைக்கின்றார்கள்.

இலங்கையில் சுமார் 66 சதவீத பெண்கள் ஒன்லைன் துன்புறுத்தலைப் சந்திக்கின்றனர். இதில் அச்சுறுத்தல் மற்றும் ஆபாச உள்ளடக்கம் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், 54 சதவீத பெண்கள் அலுவலகங்களில் நேரடியான தீங்கை அடிக்கடி அனுபவிக்கின்றனர். இது அவர்களின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் தெரிவித்துள்ளது.