தலைப்புச் செய்திகள்

நிந்தவூர் பிதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு ஆதம்பாவா எம்.பி தடை

– புதிது செய்தியாளர் –

ஊடகவியலாளர்களை நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்துக்கு அனுமதிக்கக் கூடாது என்று, தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கூறியமையை அடுத்து, அங்கு கடுமையான வாதப் பிரதிவாதங்களும் சலசலப்பும் ஏற்பட்டது.

நிந்தவூர் பிரதேச ஒருங்கியைப்புக் கூட்டம் இன்று (28) தேசிய மக்கள் சக்தி நாடளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா தலைமையில் நடைபெற்றது.

குறித்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரே, ஊடகவியலாளர்கள் கூட்டத்தை ஒளிப்பதிவு செய்வதற்கு அனுமதிக்க கூடாது என்று, பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத் தலைவர் ஆதம்பாவா எம்.பி கூறினார்.

ஆனால் இதற்கு மறுப்புத் தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, ஊடகவியலாளர்களின் பணி மகத்தானது என்றும் பொதுமக்களின் பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் எட்டப்படவுள்ள இந்தக் கூட்டத்துக்கு ஊடகவியலாளர்களை மறுப்பது ஊடக தர்மத்திற்கு மாறானதானது என்றார்.

அப்படியென்றால், ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்கு ஊடகவியலாளர்களை அனுமதிப்பதில்லை என்று, இந்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுமாறும், உதுமாலெப்பை சபையில் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் கூட – ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு எவ்வித தடையும் இதுவரையில் விதிக்கப்பட்டிருக்கவில்லை என்றும் உதுமாலெப்பை எம்.பி சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ஊடகவியலாளர்களை கூட்டத்துக்கு அனுமதிப்பதில்லை என, ஆதம்பாவா எம்.பி கூறியமைக்கு தனது எதிர்ப்பை வெளியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமுன்ற உறுப்பினர் எம்.ஏ.எம். தாஹிர்; “ஊடகவியலாளர்கள் பணியை செய்வதற்கு நாம் அனுமதிக்க வேண்டும்” என்றார். அதற்கு மாற்றமாக ஊடகவியலாளர்களை அனுமதிப்பதில்லை என்று தீர்மானம் மேற்கொண்டால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளரை வேண்டிக் கொண்டார்.

இதன் காரணமாக, குறித்த பிரதேச அபிவிரு குழு அபிவிருத்திக் குழு கூட்டத்தினை ஊடகவியலாளர்கள் உட்பட எவரும் ‘வீடியோ’ எடுக்கக் கூடாது என்று ஆதம்பாவ எம்.பி கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட நிந்தவூர் பிரதேச செயலாளர்; எதிர்வரும் கூட்டங்களில் ஊடகவியலாளர்களை அனுமதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் மாவட்ட செயலாளரிடம் எழுத்து மூலமாகக் கேட்டு, அவரின் அனுமதியின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

எனவே, மாவட்ட செயலாளரின் அனுமதி பெறும் வரை இன்று நடைபெறுகின்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை ஊடகவியலாளர்கள் உட்பட எவரும் ஒளிப்பதிவு செய்யக்கூடாது என்றார்.

குறிப்பிட்ட பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தை செய்தியாக அறிக்கையிடும் பொருட்டு, அங்கு வந்திருந்த இலத்திரனியல் ஊடகவியலாளர் ஒருவர், குறித்த கூட்டத்தை வீடியோ எடுத்தார் எனக் கூறப்பட்டு, அவரை பிரதேச செயலாளரும், ஆதம்பாவா எம்.பியும் எச்சரித்தமையும் குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித், எம்.ஏ.எம். தாஹிர், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் ஏ. அஸ்பர், நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் எஸ். சிஹாபுத்தீன், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.