தலைப்புச் செய்திகள்

நாட்டில் இரண்டு இனங்கள் மட்டும் இருப்பதாக ஸ்ரீதரன் கூறியமைக்கு ஆதம்பாவா எம்.பி கண்டனம்

நாட்டில் சிங்களவர் மற்றும் தமிழர் எனும் இரண்டு இனங்கள் மட்டுமே இருக்கின்றனர் என்று, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன், அவரின் உரையில் கூறியமை மனித உரிமைக்கு முரணானது என்று, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா நாடாளுமன்றத்தில் இன்று (22) தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று பிரேரணையொன்றினை முன்வைத்து – நாடாளுமன்றில் உரையாற்றும் போது, ”இந்த நாட்டில் இரண்டு தேசிய இனங்கள் உள்ளன. ஒன்று, தமிழ் பேசும் மக்கள் – தமிழ் தேசிய இனம், சிங்களத் தேசிய இனம்” என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கு தனது எதிர்ப்பை வெளியிட்டுப் பேசிய போதே, நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

“இங்கே சமஷ்டி பற்றி பேசப்பட்டது. சமஷ்டி மிக அவசியம் என்றால் – நீங்கள் பயப்படுகிறீர்கள் என்று பேசினார்கள். உண்மையில் சமஷ்தி என்கின்ற போது, வடக்குக் கிழக்கிலே முஸ்லிம்களும் வாழ்கின்றனர். அவர்களுக்கு எதிர்காலத்திலே என்ன நடவடிக்கைகளை நீங்கள் செய்யப் போகின்றீர்கள்? என்ன திட்டங்களை நீங்கள் வகுத்திருக்கின்றனர் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இங்கு தெரிவிக்கவில்லை” என்றார்.

மேலும், இனங்களை வைத்துக்கொண்டு எதிர்காலத்திலே அரசியல் செய்கின்ற நடவடிக்கைகள் முற்று முழுதாக இல்லாமல் போய்விடும் என்பதை தாம் பார்ப்பதாகவும் கூறினார்.

“இந்த நாட்டிலே பல அபிவிருத்தி திட்டங்கள் எல்லா மாவட்டங்களிலும், மாகாணங்களிலும் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழர்கள், சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் – இந்த ஆட்சியோடு சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அதனை அண்மையிலே தமிழ் கட்சிகளுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஹர்த்தால் பிசுபிசுத்து போய் – தோல்வி அடைந்தமை ஊடாக பார்க்கிறோம்.”.

“அந்த ஹர்த்தால் நடவடிக்கை தோல்வி அடைந்தது. ஆகவே இந்த தோல்வியானது உங்களுடன் மக்கள் இல்லை என்பதை உணர்த்துகின்றது. நீங்கள் சமஷ்டியை கேட்டாலும், அல்லது தமிழர்களுடைய முஸ்லிம்களுடைய பிரச்சினைகள்கள் பற்றி பேசுவதென்றாலும் இந்த அரசாங்கத்தோடு நீங்கள் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, இனங்களை வைத்துக் கொண்டு – இந்த நாட்டை ஒருபோதும் முன்னுக்கு கொண்டு செல்ல முடியாது.. பிரிவினைவாதமுடைய நாட்டை, ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது என்பதை நன்கு உணர்ந்தவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்; நாங்களும் இருக்கிறோம்” என்றார்.

முஸ்லிம்களைப் புறக்கணித்து, நாட்டில் இரண்டு தேசிய இனங்களே இருப்பதாக – நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கூறியமையை, புதிது செய்தித்தளம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: இலங்கையில் இரண்டு தேசிய இனங்களே உள்ளன: முஸ்லிம்களை புறக்கணித்தார் ஸ்ரீதரன் எம்.பி