
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த சட்டமூலத்தின் சரத்துக்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேலும் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சபரகமுவ பல்கலைக்கழக விரிவுரையாளர் மஹிந்த பத்திரண, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி மோகன் விஜேவிக்ரம ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த சட்டமூலத்திலுள்ள சடத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என்ற அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேற்படி மனுக்களில், சட்டமா அதிபர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.
முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் 1 முதல் 4 வரையிலான பிரிவுகள் இலங்கை அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அதிகாரப் பிரிப்பு கோட்பாட்டை மீறுவதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். சட்டமூலத்தில் பல விதிகள் மக்களின் இறையாண்மையையும் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மொத்தத்தில், இந்த சட்டமூலம் அடிப்படை அரசியலமைப்பு கொள்கைகளை மீறுவதாகவும், தனிநபர்களின் அடிப்படை உரிமைகள் உட்பட அரசியலமைப்பின் 1, 3, 4 மற்றும் 12(1) பிரிவுகளை மீறுவதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, குறித்த சட்டமூலத்தில் தொடர்புடைய பிரிவுகள் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்பட்டு, பின்னர் வாக்கெடுப்பு மூலம் மக்களால் அங்கீகரிக்கப்படாவிட்டால், அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

முன்னதாக, இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேராவும், மேலும் இரண்டு நபர்களும் இதே மசோதாவை எதிர்த்து மனு தாக்கல் செய்தனர்.



