தலைப்புச் செய்திகள்

தேவையற்றவற்றை அப்புறப்படுத்தும் வாரம்: அரச நிறுவனங்களில் அமுல்படுத்த திட்டம்

அரச நிறுவனங்களில் குவிந்துள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவதற்கான சிறப்பு திட்டமொன்றை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

‘சேரி வாரம்’ (Seiri Week) என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் – செப்டம்பர் 01 முதல் 04 வரை – அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களில் பணியாற்றுவோர் – தங்கள் கடமைகளை சுதந்திரமாகச் செய்வதற்கு ஏற்ற சுத்தமான, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணங்களின் பிரதம செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ அதிகார சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் – விசேட சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இது ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ தேசிய செயற்பாட்டுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் தேவையான மற்றும் தேவையற்ற பொருட்களை அடையாளம் கண்டு அனைத்து தேவையற்ற பொருட்களையும் அப்புறப்படுத்துவதை இந்த செயற்பாடு உள்ளடக்கும்.

வாரத்தில் அரச நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களின் தொகுப்பையும் – பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.