
குருக்கள்மடத்தில் 170 முஸ்லிம்களை எல்.ரி.ரி.ஈயினர் கடத்தி, படுகொலை செய்து புதைத்த இடத்தை மீண்டும் தோண்டக் கோருமாறு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு, இன்று (21) திறந்த நீதிமன்றில் அழைக்கப்பட்டது.
கடந்த தவணையின் போது – சட்டமா அதிபர், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக பிரதிநிதிகள் மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோரை, இன்றைய தினம் நீதிமன்றுக்கு சமூகமளிக்குமாறு நீதவான் கட்டளையிட்டிருந்தார்.
அதற்கமைவாக, இன்றைய தினம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் சட்டத்தரணிகள், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் மன்றுக்கு சமூகமளித்திருந்தனர். ஆனால் சட்டமா அதிபர் சார்பாக எவரும் இன்றைய தினம் நீதிமன்றுக்கு வருகை தரவில்லை.
இந்த நிலையில், மன்றிற்கு சமர்ப்பணத்தை மேற்கொண்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் சட்டத்தரணி; குருக்கள்மடம் மனிதப் புதை குழி முறையாக தோண்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே தமது அலுவலகம் தொடர்ந்தும் பேணி வருவதாகவும், சந்தேகத்துக்கிடமான குறித்த மனிதப் புதை குழி அமையப்பெற்றுள்ளதாக நியாயமாக நம்பப்படும் பிரதேசத்தைத் தோண்டுவதற்கான கட்டளையினை நீதிமன்றம் வழங்குமனால், தாங்கள் அவதானிப்பாளர்களாகச் செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேற்படி சமர்ப்பணத்தை கருத்திற்கொண்ட நீதிமன்றம், குருக்கள்மடம் மனிதப் புதைகுழியை தோண்டுவதற்கான மீள் திட்ட வரைபை மன்றிற்குச் சமர்ப்பிக்குமாறு கொழும்பு சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரிக்கு கட்டளை பிறப்பித்தார். மேலும் அடுத்த தவணைத் தினத்தில் மன்றில் முன்னிலையாகுமாறு சட்டமா அதிபருக்கும் கட்டளையிடப்பட்டது.
இதனையடுத்து, குறித்த வழக்கு அடுத்த மாதம் 25ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டது.
குறித்த வழக்கில் முறைப்பாட்டாளர் அப்துல் மஜீத் ரஊப் சார்பில் – குரல் இயக்கத்தின் தலைவர் சட்டத்தரணி முகைமீன் காலித், அதன் சட்டத்தரணிகளான முபாறக் முஅஸ்ஸம், ஹஸ்ஸான் றுஷ்தி, எஸ்.எம். மனாருத்தீன், எப்.எச்.ஏ. அம்ஜாட் மற்றும் ஏ.எல். ஆஸாத் ஆகியோர் இன்றைய தினம் மன்றில் தோன்றினர்.
இதையும் காணுங்கள்



