
ஓய்வுபெற்ற 88 வயதுடைய சிங்கள ஆசிரியையொருவர், அண்மையில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர தமிழ் மொழி பரீட்சைக்குத் தோற்றி, சி (C) தர பெறுபேற்றைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
பிரபுத்தகம – அங்குருவதோட்டை எனும் பிரதேசத்தைச் சேர்ந்த கே. மிசலின் நோனா என்பவரே இவ்வாறு தமிழ் பாடத்தில் சித்தியடைந்துள்ளார்.
“நான் சிறந்த ஒன்றை எதிர்பார்த்தேன் – குறைந்தபட்சம் பி (B) சித்தி கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனாலும், தற்போதைய முடிவு கிடைக்கப் பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். “இப்போது, நான் மீண்டும் தமிழ் பரீட்சைக்குத் தோற்றி ‘ஏ’ (A) தரத்தில் சித்தி பெறுவதற்குத் தயாராகி வருகிறேன். அதுதான் எனது திட்டம்” என,மிசலின் நோனா கூறியுள்ளார்.
1937 இல் பிறந்த மிசலின் நோனா – தனது மூத்த மகள் மற்றும் பேத்தியுடன் வசிக்கிறார். அவர் ஏழு குழந்தைகளின் தாயார். அவருடைய மகன்கள் ஆயுதப்படைகளில் பணியாற்றி இப்போது ஓய்வு பெற்றுள்ளனர்.
தமிழ் மொழி பரீட்சையை எழுத வேண்டும் என்ற அவரது முடிவு தனிப்பட்டதாகும். “எங்கள் சமூகத்தில், தமிழ் என்பது நமக்குத் தேவையான மொழி. நான் அதை இன்னும் ஆழமாகப் படிக்க விரும்பினேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளதோடு, “தமிழ் படிக்க எனக்கு ஒரு ஆசிரியர் இல்லை. நான்தான் தமிழ் புத்தகங்களைக் கண்டெடுத்து படித்தேன்” என்றார்.
1957 ஆம் ஆண்டு, தனது 20 வயதில், மிசலின் நோனா, முதன்முதலில் ஆசிரியர் பணியில் நுழைந்தார். நுவரெலியா – மதுகல்ல எனும் பகுதியிலுள்ள ஒரு தூரப் பிரதேசப் பாடசாலைக்கு அவர் நியமிக்கப்பட்டார். “நான் அங்கு செல்ல காடுகள் மற்றும் மலைகள் வழியாக நடக்க வேண்டியிருந்தது” என்று, அவர் பழைய நினைவுகளை மீட்டினார்.
பின்னர், அவர் அக்குரணயில் உள்ள புலுகதென்ன முஸ்லிம் பள்ளிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தமிழ் பேசும் மாணவர்களுக்கு சிங்களம் கற்பித்தார். அந்த நேரத்தில் அவருக்கு தமிழ் தெரியாது.
40 வருட சேவைக்குப் பிறகு, 1996 இல் அவர் மிசலின் நோனா தனது ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.



