தலைப்புச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை – லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

முறைப்பாடு ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (04) லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரான பின்னர் – முன்னாள் அமைச்சரை அதிகாரிகள் கைது செய்தனர். ஆனாலும் அவர் கைது செய்ய்பட்டமைக்கான காரணங்கள் சரியாகத் தெரியவில்லை என செய்திகள் கூறுகின்றன.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவின் சகோதரரான முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரின் முன்னாள் செயலாளராக பணியாற்றிய சந்திரசேனவின் மனைவி சாந்தினி ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டனர்.

ஏப்ரல் 02 அன்று, லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு சாட்டிய ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, கொழும்பு மேல் நீதிமன்றம் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் சாந்தினி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது.

வடமத்திய மாகாண முதலமைச்சராக பணியாற்றிய எஸ்.எம். ரஞ்சித், தனது தனிப்பட்ட செயலாளர் சாந்தினி சந்திரசேனவின் அதிகாரப்பூர்வ வாகனத்திற்கு எரிபொருள் ஒதுக்கியதாக குற்றம் சாட்டப்பட்டார். அவரது சம்பளத்தில் எரிபொருள் கொடுப்பனவு சேர்க்கப்பட்ட நிலையில் இவ்வாறு மேலதிகமாக எரிபொருள் ஒதுக்கியிருந்தார்.

2012 முதல் 2014 வரை ரஞ்சித் முதலமைச்சராக இருந்த காலத்தில், அவரின் தனிப்பட்ட செயலாளராக சந்திரசேனவின் மனைவி சாந்தினி பணியாற்றினார்.

இந்த காலகட்டத்தில் வவுச்சர்கள் மூலம் 26 லட்சத்து 80 ஆயிரத்து 528 ரூபாய் மற்றும் 53 லட்சத்து 79 ஆயிரத்து 623 ரூபாய் மதிப்புள்ள எரிபொருளைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சாந்தினி சந்திரசேன மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு வழக்குப் பதிவு செய்தது.

முதலமைச்சரின் இரண்டு அதிகாரப்பூர்வ கார்கள் மற்றும் பாதுகாப்பு வாகனத்திற்கு மேலதிகமாக, மாகாண சபை உறுப்பினர்களின் இரண்டு வாகனங்களை விடுவிப்பதற்கு முதலமைச்சர் ரஞ்சித் மற்றும் அவரின் தனிப்பட்ட செயலாளர் சாந்தினி ஆகியோர் செல்வாக்குச் செலுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.