
இஸ்ரேலியப் படையினர் கடந்த 48 மணி நேரத்தில் 300க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்களைக் கொன்றுள்ளனர் என, காஸா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் இஸ்ரேல் ’26 ரத்தக்களரி படுகொலைகளைச் செய்துள்ளது’ என்றும் அந்த அலுவலகம் கூறியுள்ளது.
இன்று (03) வியாழக்கிழமை விடியற்காலையில் இருந்து குறைந்தது 73 பேரை இஸ்ரேல் படையினர் கொன்றுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் – சர்ச்சைக்குரிய இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க ஆதரவு பெற்ற காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) உதவித் தளங்களில் உதவி பெற வந்த 33 பேர் அடங்குகின்றனர்.
காஸா தெற்கில் அல்-மவாசி பகுதியில் ஒரு கூடாரத்தை இஸ்ரேலியப் படைகள் தாக்கியதில், பதின்மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் காஸா நகருக்கு மேற்கே இடம்பெயர்ந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த முஸ்தபா ஹபீஸ் பாடசாலை மீது இஸ்ரேலியப் படையினர் நடத்தியதில் மேலும் 11 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர் என்று அல் ஜசீராவிடம் – வைத்தியசாலை வட்டாரங்கள் கூறியுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்களால் நிரம்பிய தங்குமிடங்கள் மற்றும் இடம்பெயர்வு மையங்களில் உள்ள பொதுமக்களை இஸ்ரேலியப் படைகள் குறி வைத்ததாகவும் காஸா அரசாங்க ஊடக அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அல்-பக்கா பொது ஓய்வுப் பகுதி, வீடுகளுக்குள் இருந்த பலஸ்தீன குடும்பங்கள், பிரபலமான சந்தைகள் மற்றும் முக்கிய பொது இடங்கள் மற்றும் உணவு விநியோகப் பகுதிகளுக்கு வந்த மக்கள் குறி வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.



